Home » » மாணவர்கள் மீதான தாக்குதலும் எழுந்துள்ள எதிர்ப்பலைகளும்

மாணவர்கள் மீதான தாக்குதலும் எழுந்துள்ள எதிர்ப்பலைகளும்





கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடாத்தினர். இந்தச் சம்பவமானது யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தில் மாத்திரமன்றி நாடளாவியரீதியில் இருக்கின்ற சகல பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இந்த விடயமானது தமிழ்மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்த அராஜக  செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளதை காணககூடியதாக இருக்கிறது.

யாழ் கல்விச் சமூகத்தைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிய விடயம் அல்ல அவ்வப்போது பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்துவதும் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்படுவதும் இடம்பெற்று வந்துள்ளன. அத்தோடு விசாரணைகளுக்காகவென பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்கள் கைது செய்யப்படுவதும் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படுவதும் வழமையான ஒரு விடயமாக ஏற்கெனவே காணப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்து மூன்றுவருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இவ்வாறு மாணவர் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அச்சத்தையும் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதே உண்மை.

நாட்டில் சிறுபான்மை என்ற எவரும் கிடையாது அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகளே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் வடக்கில் தொடர்ந்தும் அடக்குமுறைகளும் அட்டகாசங்களும் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி தமிழர்களை குடைந்தெடுக்கின்றது. இந்த நிலையிலேயே கடந்த 27 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் நான்கு மாணவர்களையும் குற்றப்புலனாய்வினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

வருடம்தோறும் கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் தமிழர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி உணர்வலைகளோடு யுத்தத்தால் மரணித்த தமது உடன்பிறப்புகளுக்காக வழிபடுவது வழமை. அத்தோடு இந்தியா உட்பட பல மேற்குலக நாடுகளிலும் இந்த கார்த்திகை மாத நிகழ்வு அனுஷ்டிக்கப்படுவது யாவரும் அறிந்த விடயமே. யுத்த காலத்தின்போது இந்த மாதத்தில் அரசாங்கம் இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதும் நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழமையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியான சூழல் தோன்றியிருப்பதாக அரசாங்கமே கூறுகின்றது. இந்த நிலையில் வடக்கில் மாத்திரம் ஏன் இப்படி அராஜகம் இடம்பெறுகிறது?

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவது என்பது ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் கட்டாய நிகழ்வாகும். இலங்கையிலும் யுத்தத்தில் இறந்த படைவீரர்களை நினைவுகூருகிறNhம். அந்தவகையில் தமிழர்கள் தமக்காய் இறந்தவர்களை கார்த்திகை 27 ஆம் நாளில் நினைவுகூருகின்றார்கள்.

இவ்வாறான ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் படையினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் தீபம் ஏற்றி கார்த்திகை வீரர்களை நினைவு கூருவார்கள். அவ்வாறே கடந்த 27 ஆம் திகதி மாணவர்கள் கார்த்திகை வீரர்களை நினைவு கூருவதற்கு தயராகிக் கொண்டிருக்கையில், பல்கலைக்கழக விடுதிகளுக்குள் அத்துமீறி புகுந்த ஆயுதக்குழு தமது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. மாணவர்கள் மாணவிகள் என்று பேதம் பார்க்காமல் அவர்களின் அறைகளுக்குள் நுழைந்து ஏற்றிவைக்கப்பட்ட கார்த்திகை தீபங்களை பார்த்து ஆத்திரமடைந்த அவர்கள் அறைகளை அடித்து நொருக்கினர். சற்றும் ஏதிர்பார்க்காத மாணவிகள் பலர் ஆயுதக் கும்பலைப் பார்த்து பயத்தில் மயக்கமுற்று வீழ்ந்தனர்.

ஆயுக்குழுவின் இந்த அட்டூழியத்தைச் சகிக்கமுடியாத மாணவர்கள் பலர் எதிர்ப்பை வெளியிட்டனர். இது கைகலப்பாக மாறியது. அத்துடன் மாணவர்கள் கற்களை வீசி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவ்வாறு அன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் நடந்த சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக விடுதிக்குள் ஆயுதக்குழு அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கியதைக் கண்டித்து சம்பவ தினத்திற்கு அடுத்த நாள் 28 ஆம் திகதி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அவர்கள் பேரணியாக விஞ்ஞான பீடத்துக்குச் செல்ல முயன்றனர். 27 ஆம் திகதி முதலே பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் குவிக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிஸார் மாணவர்களின் பேரணியை இடை மறித்தனர். அப்போது மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

'ஆரம்பத்தில் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் தடிகளாலும் பொல்லுகளாலும் எங்களைத் தாக்கத் தொடங்கினர் நாங்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்த போது அவர்கள் எம்மைத் துரத்தித் துரத்தி தாக்கினார்கள் மாணவர்கள் சிலர் கீழே விழுந்தார்கள் அவர்களைப் பொலிஸார் தமது சப்பாத்துக் கால்களால் மிதித்துக் காயப்படுத்தினார்கள். இவர்களது தாக்குதல்களுக்கு மாணவிகள் மட்டும் விதிவிலக்கல்ல மாணவிகள் என்றுகூடப் பார்க்காமல் அவர்கள்மீதும் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் பதினைந்து மாணவர்கள் வரை காயமடைந்தார்கள் மாணவிகள் உட்பட எட்டுப்பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நான்கு மாணவர்களை பொலிஸார் அவ்விடத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் பேராசிரியர்களும் துணைவேந்தரும் பொலிஸாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவர்கள் இராணுவத்தினர் மீதும் பொலிஸார்மீதும் கற்களையும், போத்தல்களையும் வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதை அடக்குவதற்காகவே இந்ந தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் கடந்த 30ஆம் திகதி யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ப. தர்ஷானந் (வயது 24), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க. ஜெனமேனன் உட்பட நான்கு மாணவர்கள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருநெல்வேலி சிறி ரெலோ கட்சி அலுவலகத்தின்மீது பெற்றNhல் குண்டுத் தாக்குதல் நடத்தியமை மற்றும் மாவீரர்தின போஸ்டர்கள் ஒட்டியமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல எதிர்ப்பலைகள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எழும்ப ஆரம்பித்துள்ளன.  இத்தாக்குதல் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டது. சபையில் சுமந்திரன் எம்.பி. நாட்டில் சட்டம் ஒரு பாரதூரமான நிலைமையை முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீதித்துறையின் சுயாதீனத் தன்மை பாதாளத்தை நோக்கிச் செல்கிறது. இப்போது யாழ். பல்கலைக் கழகத்துக்குள் புகுந்து பெண்கள் விடுதிக் கதவுகளை உடைத்து கட்டில்களை நொருக்கியுள்ளனர் இவ்வாறான மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

'தமிழர்கள் மீது அடக்குமுறைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன இதன் ஒரு அங்கமே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல். பல்கலைக்கழக மாணவர்களை அடக்கியாள நினைக்கும் படையினர் இவ்வாறான கலவரங்களை அவிழ்த்துவிட்டு பழிதீர்க்கிறது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவும் தன் பங்கிற்கு கவலை வெளியிட்டுள்ளது. அமைதியாக மேற்கொள்ளப்படும் பேரணிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இலங்கை அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தூதரகம் ஆழ்ந்த கவலை அடைகிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இலங்கை அரசை வலியுறுத்துகின்றNhம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்தும் மாணவர்களுக்கு ஆதரவாய் பல குரல்கள் எழுந்துள்ளன. நாம்தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் ' மாணவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையானது காட்டுமிராண்டித்தனமானது. புனிதமான கார்த்திகை நாளை நினைவுகூருவது தமிழர்களின் கடமையாகும் இதை திட்டமிட்டு தடுக்கும் செயலே மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்" என தெரிவித்துள்ளார். இதேவேளை தி.மு.க. தலைர் கருணாநிதி ' யாழ்ப்பாணத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் கார்த்திகை தீபத்தையொட்டி தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் வீடுகளில் ஏற்றிவைத்த தீபத்தைக்கூட அடித்து நொருக்கி ஈழத்தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியுள்ளமையை கண்டிக்கிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சஞ்சீவ பண்டார இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்' யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்றும், அவர்களது பாதுகாப்பை வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த திங்கட்கிழமை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். கிழக்குப்பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாக முன்றலில் இடம்பெற்ற எதிர்ப்பார்ப்பாட்டத்தில். 'பல்கலைக்கழகம் என்பது போர்க்களமா?", ' இலங்கை அரசே பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்", 'இராணுவமே மாணவர் சக்தியை முடக்க முயற்சிக்காதே" எனப் பல சுலோகங்களை மாணவர்கள் எழுப்பினர். பல்கலைக்கழக செயற்பாடுகள் வழமைக்கு திரும்புவது என்றால் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவமும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் உட்பட நான்கு மாணவர்களையும் விடுவிக்கக்கோரியும் யாழ்.நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று யாழில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் நவசமசமாஜக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிஸ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு இராணுவம், பொலிஸாரினது அடக்குமுறைகளை எதிர்த்துக் கோஷமிட்டனர்.
இதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தினர். தமிழ்ப்பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி சகல தமிழ்க் கட்சிகளும் ஒப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றையும் அனுப்புவதற்காக இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'சர்வதேசமே சுய நிர்ணய உரிமையுடன் தமிழ் தேசத்தை அங்கீகாரம் செய்", 'யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கின்றNhம்",'விடுதலை செய் விடுதலை செய் மாணவர்களை விடுதலை செய்", 'தமிழர்களின் கல்வி வளத்தை அழிக்காதே", 'தமிழ் மாணவர்களை சுதந்திரமாகக் கல்வி கற்க விடு",  போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைககளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் சமூகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எழுந்துள்ள எதிர்ப்பலைகள் அவர்களை நம்பிக்கை அடைய வைத்துள்ளன. கடந்த காலங்களிலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன. அப்போதெல்லாம் இந்த அளவிற்கு அவர்களுக்கு ஆதரவுக்குரல்கள் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது எழுந்துள்ள எதிர்ப்பலைகள் தமிழ் மக்கள் இதயங்களில் பாலை வார்த்துள்ளன.

எஸ்.ரகுதீஸ்


Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger