யாழ். பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடியடி!


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பு தரப்பினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் உருவெடுத்துள்ளதை அடுத்து மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் தடியடி நடத்தி வருகின்றனர் என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் மாணவர்களில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை, செய்திச் சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததை கண்டித்து, இன்றைய தினம் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கறுப்புத்துணி அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அவ்விடத்துக்கு விரைந்த சுமார் 200 பேர் அடங்கிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சைச்சாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.


இது தொடர்பில், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேராவிடம் - தமிழ்மிரர் தொடர்புகொண்டு கேட்டபோது, “அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸார் அங்கிருந்து அமைதியான முறையில் கலைத்ததாகவும், இதன்போது பாதுகாப்பு தரப்பினரால் தடியடி எதுவும் நடத்தப்படவில்லை என்றும் மாணவர்களோ அல்லது ஊடகவியலாளர்களோ பாதிக்கப்படவில்லை“ என்றும் கூறினார்.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger