ஃபேஸ்புக்கில் வெளியான டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் படம் போலி


டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் படம் என்று ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
டெல்லியில் பலாத்காரம் செய்ததில் பலியான மாணவியின் புகைப்படம் என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் சில நாட்களாக ஒரு புகைப்படம் உலவிக் கொண்டிருந்தது. இருப்பினும் இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் கேரளாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கேரள சைபர் பிரிவில் அப்பெண்ணின் தந்தை புகார் கொடுத்திருக்கிறார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தெரிவுக்குழுவிற்கு சட்ட அதிகாரம் இல்லை


மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

பிரதம நீதியரசர் சிரானி பண்டரநாயக்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான ஸ்ரீஸ்கந்தராஜா, அனில் குணரத்ன, டபிள்யு.சலாம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எந்தவிதமான சட்ட அதிகாரங்களும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 107 (1) நிலையியற் கட்டளை 78(ஏ) என்பவற்றால் அமைக்கப்பட்டது நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒரு நீதிபதியை குற்றவாளி என தீர்மானிக்கும் சட்ட அதிகாரம் இல்லை என்ற  உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை, உயர் நீதிமன்ற தீர்ப்பால் மூலம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை இரத்து செய்யமுடியும். இதன்  அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

மருதங்கேணி - வெற்றிலைக்கேணி தெற்கு வீதியை போக்குவரத்திற்கு திறந்துவிடுமாறு கோரிக்கை


மழைகாலங்களில் மாற்றுவீதியில்லை;பொதுமக்கள் சுட்டிக்காட்டு

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மருதங்கேணிச் சந்தியிலிருந்து வெற்றிலைக்கேணி வரையான பிரதான வீதி பொதுமக்களின் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்படாமையினால் அப்பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இவ்வீதியைத் தடைசெய்துள்ளமையினால் மழைகாலங்களில் பொதுமக்களின் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இப்பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான பிரதான போக்குவரத்து வீதியாகவுள்ள இவ்வீதியை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படவில்லை.
யாழ்ப்பாணம் - கேவில், பருத்தித்துறை - கேவில், கிளிநொச்சி - கேவில் ஆகிய பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்குரிய பேருந்துகள் இப்பிரதேசத்திற்கான பிரதான வீதியாகவுள்ள இவ்வீதியையே மழைகாலங்களில் பயன்படுத்தவேண்டியுள்ளது. எனவே இந்நிலையினைக் கருத்திற்கொண்டு இவ் வீதியை திறக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ள பொழுதும்  இராணுவத்தினர் இன்னமும் திறந்துவிடவில்லை.
மண்டலாய் பிள்ளையார் ஆலயம், உணவத்தை கண்ணகை அம்மன் ஆலயம், புல்லாவெளி புனித செபஸ்தியர் ஆலயம் போன்ற ஆலயங்களுக்கான பிரதான போக்குவரத்து வீதியாகவும் இவ்வீதியே காணப்படுகிறது.
அத்துடன் பிரதேச மக்களின் பிரதான சுடுகாட்டுக்கு செல்லும் வீதியாகவும் இவ்வீதி காணப்படுகிறது.
இதேவேளை மாரி மழைகாலங்களில் தாளையடி- கட்டைக்காடு கடற்கரை வீதி முற்றுமுழுதாகத் தடைப்படுகின்ற நிலையில் இவ்வீதியே போக்குவரத்திற்கு உகந்தது என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே பிரதேச மக்களின் நலன்கருதி மருதங்கேணி - ஆழியவழை ஊடான வெற்றிலைக்கேணி மருதடி வரையான பிரதான வீதியை மக்கள் பாவனைக்கு திறந்து விடுவதுடன் இவ் வீதியையும் தாளையடி கட்டைக்காடு கடற்கரை வீதியையும் போக்குவரத்திற்கு ஏற்றவகையில் திருத்தி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இப்பிரதேச சமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger