திரையுலகின் மார்க்கண்டேயர் கவிஞர் வாலி

தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் கவிஞர் வாலி பக்தி  இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால்  மாயக்கண் ணன் என்று வர்ணிக்கப்படுகின்றார். திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். இவரது குடும்பம் ஸ்ரீரங்கத்துக்குவந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார்  பொன்னம்மாளின் தம்பதிகளுக்கு மகனாக 29 ஆம் திகதி ஒக்டோபர், 1931 ஆம்ஆண்டு பிறந்தார். டி.எஸ்.ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட  வாலி படித்தது அந்தக்காலத்து எஸ்.எஸ்.எல்.சி. பின்னர், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் கல்வி கற்றார்.
தன் நண்பர்களின் துணையுடன்நேதாஜிஎன்னும் கையெழுத்துப் பத்திரிகையைத் ஆரம்பித்தார். அதன் முதல் பிரதியை எழுத்தாளர் கல்கியின் கையால் வெளியிட வைத்தார். அந்த விழாவிற்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரி   வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகை மிகவும் பிரபலம் இடைந்தது.  பல இளைஞர்கள் அந்தப் பத்திரிகையில் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .
இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் மிகவும் பிரபல்யமானவை. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அத்துடன் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் ஹேராம், பார்த்தாலே பரவசம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
தமிழ் மொழியில் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. சிறப்பாக படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

கவிஞர் வாலி ரமணத்திலகம் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோர்.  ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள். மனைவியின் மறைவு வாலியை பெரும் துயரில் ஆழ்த்தி அவரை நோய்வாய்ப்பட வைத்தது. வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலியை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே தபால் அட்டையில் டி.எம்.எஸ் சௌந்தரராஜனுக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலைஎன்றாலும் கந்தனே உனை மறவேன் பாடல். இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!. 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்,வாலி  அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டியக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி போன்றன குறிப்பிடத் தக்கவை. இயக்குனர் மாருதிராவோடு  இணைந்து ‘வடை மாலை’ என்ற திரைப்படத்தை இயக்கியும் உள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகிய  இருவருக்கும் கவிஞர் வாலி மிகவும் பிடித்தமானவர். எம்.ஜி.ஆர். வாலியை `என்ன ஆண்டவனே என்று தான் அழைப்பாராம். சிவாஜி கணேசன்`என்ன வாத்தியாரே’! என்றுதான் அழைப்பாராம்.
பல விருதுகளைப் பெற்ற வாலி, 2007 ஆம் ஆண்டு பத்மசிறி விருதினைப் பெபற்றுக் கொண்டார்.  அத்துடன் பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது, ஐந்து மாநில அரசின் விருதுகள் எனவும்  பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ்மாநாடு போன்றவற்றின் இவரது பங்கு அளப்பரியது. கண்ணதாசன் இறந்தபோது ‘எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’  என்ற கண்ணீர் வரிகளை வாலி எழுதினார். எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்தச் சந்தர்ப்பத்திலம் கவிஞர் வாலி வெளிநாடுகளுக்குச் சென்றதில்லை. கடவுச்சீட்டே  இல்லாத பாட்டுக்காரர் இவர் என்று பலராலும் வியந்து புகழப்பட்டவர்.இலங்கைத் தமிழர்களின் மீது அதீத பற்றுக் கொண்ட கவிஞர் வாலி இறுதி யுத்தத்தின் போது  ‘இருக்கிறானா? இல்லையா? என்ற தலைப்பில் கவி வடித்து, தன் சொந்தக் குரலிலேயே வாசித்து  அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றார்.
யார் மனதும் நோகும்படி ஒரு சொல்லைக் கூடப் பிரயோகிக்காத ஒரு கவிஞர். கவிமாமுனி, வாலிபக் கவி, காவியக் கவி என்றெல்லாம் இந்த திரையுலகம் ஆயிரம் அடைமொழி சூட்டி அழைத்தாலும், தனக்குப் பிடித்த ஒரே அடைமொழிகவிஞர்தான்  என்று அடிக்கடி கூறுவார் வாலி . முதல்வர் ஜெயலலிதாவை ரங்கநாயகி என்று புகழ்ந்தாலும், கலைஞரே என் உற்ற நண்பர் என எந்த மேடையிலும் தயங்காமல் சொல்லும் தைரியசாலி. மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன் வரிசையில் திரையிலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் செழுமைப்படுத்திய உழவன், இந்த தமிழ்க் கிழவன்!
 “நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ” என்று உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் பாடல் எழுதிய வாலி, கடந்த மாதம் வெளியாகிய தில்லுமுல்லு திரைப்படத்தில் “கைபேசி எண் கூட சொல்லாமலே கைவீசி சென்றாளே நில்லாமலே” என்ற பாடலை எழுதினார். இந்த இரண்டு பாடலிலும் அவரின் இந்த இளைமைத் துடிப்பு சற்று குறைந்ததாகத் தெரியவில்லை. இதனாலேயே அவர் தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயக் கவிஞர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இதை உறுதிப்படுத்தும் விதமாக கவிஞர் வாலி அண்மையில் வெளியான எதிர் நீச்சல் திரைப்படத்தில் அவர்  எழுதிய “வெளிச்சப் பூவே” என்ற பாடல் இளசுகளின் தேசிய கீதமாக ஒலிக்கின்றது.தள்ளாத வயதிலும் காதல் ரசம் ததும்பும் சினிமாப் பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதைக் துள்ளாட்டம் போடவைத்த கவிஞர் வாலி இன்று மரணப்படுக்கையில் இருப்பது சினிமா ரசிகர்களை மட்டுமன்றி தமிழ் பேசும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நுரையீரலில் தொற்றும் சளி படலமும் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல் நிலை  மோசம் அடைந்துள்ளது. தொடர்ந்தும் அவர் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger