Home » » ஹரிதாஸ் - திரை விமர்சனம்

ஹரிதாஸ் - திரை விமர்சனம்

ஆட்டிசம் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு. இக்குறைபாடுள்ள குழந்தைகளின் பிரச்சனையை முளையிலேயே உணர்ந்து அதற்காக ஸ்பெஷல் பயிற்சிகள் கொடுத்தால் அக்குழந்தையும் சமுதாயத்தில் சிறந்து விளங்கக்கூடியவனாய் வலம வர முடியும். உலகில் தலை சிறந்த இடத்தை பிடித்தவர்கள் பல பேர் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளி வந்தவர்கள் தான். எதற்காக ஆட்டிசத்தைப் பற்றி எழுதுகிறேன் என்றால் இப்படம் ஆட்சத்தினால் பாதிக்கப்பட்ட மகனுக்கும், அவனின் வாழ்க்கையை தன் வாழ்க்கையாய் கொண்ட தகப்பனுக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் படத்தின் கதை.என்னடா இது ஆட்டிசம், அப்பா, மகன் உறவு என்று செண்டிமெண்டை கொட்டி,  பிரச்சாரமாய் இருக்குமோ என்று பயப்படாதீர்கள். ஒர் சுவாரஸ்ய திரைக்தையமைத்து மிக அழகாய் கொடுத்திருக்கிறார்கள். ரொம்ப நாளாகி விட்டது தமிழில் இப்படி ஒரு சென்சிபிள் படம் பார்த்து.

கிஷோர் ஒரு போலீஸ் ஆபீசர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். மனைவியை இழந்தவர். தன் மகனுக்காக தன் வேலையை கூட இழக்க தயாராக இருக்கிறவர். அவனின் தேவையை அறிய அவர் படும் பாடும், அதை அறிந்தவுடன் அவனை தயார்படுத்த படும் முயற்சிகளும், வேலையே வேண்டாமென்று இருந்தவரின் டீம் மெம்பர் ஒருவர் கடத்தப்பட, அவனை காப்பாற்ற வேண்டி வேலைக்கும், மகனின் கனவுக்குமிடையே  அலைபாயும் கேரக்டர்.. போலீஸ்காரனாய் இருக்கும் போது காட்டும் விரைப்பாகட்டும், மகன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் அவனை கட்டிப் பிடித்து அழுமிடமாகட்டும், அவனுடய தேவை இதுதான் என்று புரிந்து அதற்காக அவமானப்படுமிடமாகட்டும், நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார். தமிழ் இயக்குனர்கள் இவரை இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.


ரொம்ப நாளைக்கு பிறகு பாந்தமான சிநேகா. கிஷோர், சிநேகா, ஹரிதாஸிடையே ஆன உறவுகளின் நெருக்கமும், நெகிழ்வும் க்ளாஸ். பள்ளியில் பையனுடன் உடன் உட்காரும் கிஷோரின் முன்னால் புடவையில் க்ளாஸ் எடுக்க சிரமப்படும் போது சிநேகா காட்டும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களாகட்டும், கிஷோரை சின்னப்பதாஸ் என்று கலாய்த்துவிட்டு கொண்டிருக்கும் போது அவரின் உண்மை நிலை புரிந்து இரக்கம் கொள்ளும் போதாகட்டும், எந்த ஒரு காட்சியிலும் வலிந்து திணிக்கப்பட்ட, ரியாக்‌ஷனாய் இல்லாமல் மிக இயல்பாய் கேரக்டரை உணர்த்தியிருக்கிறார். இப்படி ஒரு டீச்சர் ஒவ்வொரு ஸ்பெஷல் சைல்டுக்கும் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்க வைக்கும் கேரக்டர். மிக அழகாய் கையாண்டிருக்கிறார்.

ஒரு பாடலைச் சொல்லிக் கொடுக்க முனையும் சிநேகாவும், அந்த ஒரு ஸ்டெப்பிலேயே கவனம் சிதறுவதை சிநேகாவும், கிஷோரும் புரிந்து கொள்வதும் அழகோ அழகு.. என்னவொரு நளினம் சிநேகாவிடம்..! சிநேகாவின் நடிப்புத் திறமைக்கு இன்னமும் தீனி போடலாம்..! தனது அம்மாவின் எதிர்ப்பையும் மீறி பையனை தன்னுடன் வைத்துக் கொள்ள அவர் செய்யும் முனைப்பும், நான் காலம்பூரா அந்தப் பையனுக்கு அம்மாவா இருக்க விரும்புறேன் என்று சொல்கின்ற அழுத்தமான நடிப்பும்தான் சினேகாவை மீண்டும் நினைக்க வைக்கிறது..!  “கோச், டாக்டர் மாதிரி பேசுறாரு.. டாக்டர், கோச் மாதிரி பேசுறாரு..” என்று இறுக்கமான முகத்துடன் இவர் பேசும் டயலாக்கிற்கு தியேட்டர்களில் நிச்சயம் கைதட்டல் கிடைக்கும்..! 


பிரிதிவிராஜ் தாஸ். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையாய் வருகிறான். செம. கடைசி வரை பெரிய ரியாக்‌ஷன் ஏதுமில்லாமல் அம்மாதிரியான குழந்தைகளை அருகில் இருந்து கவனித்தவர்களுக்கு தெரியும் அவர்கள் முகத்தில் தெரியும் சிறு சிறு மாற்றங்களில் எவ்வளவு அர்த்தம் பொதிந்திருக்குமென அவ்வளவு எக்ஸ்ப்ரெஷன் மட்டுமே கொடுத்திருக்கிறான். அருமை

காமெடிக்காக வரும் சூரி, ஸ்கூல் காதலி டீச்சர், ஸ்கூலிக் படிக்கும் ஓமக்குச்சி என்று பெயர் வைத்திருக்கும் குண்டுப் பையன், சிநேகாவின் தங்கை, என்கவுண்டர் டீமில் இருக்கும் போலீஸ்காரர்கள், வில்லன் பிரதீப் ராவத்,  என்று குட்டிக் குட்டி கேரக்டர்களுக்கு கூட பொருத்தமான் காஸ்டிங் செய்திருக்கிறார்கள். முக்கியமாய்  கார்பரேஷன் ஸ்கூல் ஹெட்மிஸ்டர்ஸாக வருபவரின் குரல் மாடுலேஷனும், பாடிலேங்குவேஜும் அட.. என்று கவனிக்க வைக்கிறார்கள்

இம்மாதிரியான கதைகளுக்கு உறுத்தாத, துறுத்தாத ஒளிப்பதிவு என்பது மிக மிக அவசியம். அதை உணர்ந்து கதைக்கு தேவையான விஷுவல்களை அளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. ஆக்‌ஷன் காட்சிகளில் தெரியும் விஷுவலுக்கும் பையன் அப்பா சம்பந்தப்பட்ட விஷுவலுக்குமிடையே இருக்கும் இறுக்கத்தை  டோனில் வெளிப்படுத்தியிருப்பது க்யூட். விஜய் ஆண்டனியின் இசையில் முதல் குத்துப் பாடல் அநாவசியமாய் இருந்தாலும் பெப்பி. பின்னணியிசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற ஆதங்கம் ஏற்படத்தான் செய்கிறது. சமயங்களில் இசை கொடுக்கும் நெகிழ்வான உணர்வுகள்  படத்தின் குவாலிட்டிக்கு மிக முக்கியமாய் அமையும். படத்திற்கு இன்னொரு பலம் வசனம். இம்மாதிரியான படங்களுக்கு வசனம் மிக முக்கியம். ஏனென்றால் பிரசாரமாகவும் அமைந்து விடக்கூடாது. ஆனால் அதே சமயத்தில் விஷயத்தை சொல்லியும் ஆக வேண்டும் என்ற நிலையில் ஷார்ப்பான ரெண்டு லைன் பஞ்சுகளில் பல இடங்களில் கைத்தட்டல் வாங்குகிறார் வசனகர்த்தா வெங்கடேஷ். “திருந்தனும்னு நினைக்கிறவன் மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்க மாட்டான்” ”விழுந்தாத்தான் எழுந்துக்கிறது எப்படின்னு தெரியும்” டாக்டர் யூகி சேதுவும், கோச்சும் பேசும் வசனங்களில் இருக்கும் புத்திசாலித்தனம் கொஞ்சம் பாலசந்தர்தனமாய் இருந்தாலும் க்ளாஸ்.
எழுதி இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேல். நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி ஆகிய படங்களை இயக்கியவர். இவரின் முந்தைய படங்களை பார்த்தவர்கள் நிச்சயம் இவரிடமிருந்து இப்படி ஒரு படமா? என்று மூக்கின் மேல் விரல் வைப்பார்கள். கொஞ்சம் அசந்தாலும் பிரச்சாரமாய் போய்விடக்கூடிய கதைக் களனில், சூரியின் காமெடி, ஒர் குத்துபாட்டு போன்ற கமர்ஷியல் என்று திணிக்கப்பட்ட சில விஷயங்கள் இருந்தாலும், இம்மாதிரி குழந்தைகளின் தகப்பனின் வேலை, அந்த வேலையும் போலீஸ்காரன் என்று வரும் போது வேலையில் இருக்கும் ப்ரச்சனை, வீட்டு ப்ரச்சனை என்று ஒரு பக்கம் விறுவிறு ஆக்‌ஷன் ப்ளாக்காகவும், இன்னொரு பக்கம் செண்டிமெண்டான நெகிழ்ச்சி தரும் சம்பவங்களை திரைக்கதையாக்கியிருப்பது சிறப்பு. குறிப்பாக என்கவுண்டர் டீமின் போலீஸ்கார நண்பன் கடத்தப்பட, இன்னொரு பக்கம் சிநேகா பள்ளிக்கூட எஸ்கர்ஷனிலிருந்து ஹரி காணாமல் போய்விட, இரண்டு பக்கத்தையும் ஒரெ சேர இணைத்து தேடலை காட்டியிருக்கும் விதம் அருமை. சிநேகாவின் கேரக்டர், ஹரியின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பு, அன்பினால் எடுக்கும் முடிவுகள் என்பது போன்ற விஷயங்கள் க்ளிஷே என்று சொல்வார்கள். ஆனால் இம்மாதிரியான க்ளிஷேக்கள் இல்லாத நிஜ வாழ்க்கையில்லை எனும் போது இம்மாதிரியான கதைகளுக்கு அதுவே பலமாகிப் போகிறது.   மைனஸாய் ஒரிரு விஷயங்கள் இருந்தாலும் அவைகள் படம் கொடுக்கும் உணர்வை கெடுக்கவில்லை என்பதால் குறிப்பிட தேவையில்லை என்றே தோன்றுகிறது
 
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger