வன்னியில்
சம்பவம்
முல்லைத்தீவு உடையார்கட்டு குரவாய் பகுதியில் உடையார்கட்டு மகாவித்தியாலயத்திற்கு உயர்தரம் கற்பதற்காய் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மாணவி காட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வாளரால் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வேளை பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி வழமையாக பாடசாலை செல்வது போன்று கடந்த திங்கள் தனது துவிச்சக்கரவண்டியில் பயணத்தை ஆரம்பித்து சென்று கொண்டிருக்கையில் 7.00 மணியளவில் முல்லைத்தீவு உடையார்கட்டு குரவாய் அடர்ந்த காட்டுப் பகுதியல் தனிமையில் சென்ற மாணவியை சிவப்பு நிற உடை அணிந்த இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் தள்ளி விட்டு அடர்ந்த காட்டுக்குள் இழுத்துச் சென்று கொண்டிருக்கையில் மாணவி கூச்சலிட்டதால் பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டார்.
இவ் நாசகார வேலையில் ஈடுபட்ட இராணுவப் புலனாய்வாளரை இனம் கண்ட பிரதேச வாசிகள் பெற்றாரின் உதவியுடன் பொலிசில் முறைப்பாடு செய்தனர்.
இதனால் குறித்த நபரை பொலிஸில் ஒப்படைக்க தாம் நடவடிக்கை எடுக்கின்றோம் என மக்கள் தெரிவித்த வேளை குறுக்கிட்ட இராணுவத்தினர் தாம் விசாரிப்பதாகக் கூறியதுடன் குறித்த நபரையும் மாணவியின் பெற்றோரையும், அவரைத் தாக்கிய நபரையும் மட்டும் படைமுகாமுக்குள் அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு எச்சரித்துள்ளனர்.
இதனால் பயம்கொண்ட பெற்றோரும் ஏனையோரும் மேலதிக நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
இதேவேளை பாடசாலை ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக ஊர் மக்கள் ஆலோசித்தபோது பாடசாலை அதிபர் ஸ்ரீதரன் அதனை மறுத்துள்ளதாகவும், அப்பிரதேச ஆர்.டி.எஸ் அமைப்பும் இராணுவத்திற்கு சார்பான கருத்துக்களையே தெரிவிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாடசாலை அதிபர் இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளர் ராஜ்குமார் என்பவருடன் தொடர்புகொண்டதை தொடர்ந்து முல்லைத்தீவு படைமுகாமின் பொறுப்பதிகாரி மார்க் என்பவருடன் தொடர்புகொண்ட கல்விப்பணிப்பாளர் இச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றவேளை அவ் அதிகாரி விடயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் தேராவில் தேக்கங்காட்டில் அமைந்துள்ள இராணுவத்தினருக்கு அறிவித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேக்கங்காட்டு படைமுகாமிலிருந்து இராணுவத்தினர் விசாரணைக்கு வந்தபோதிலும் ஏற்கணவே இராணுவத்தினால் பயமுறுத்தப்பட்ட பெற்றோரும் மக்களும் சாட்சியத்தை வழங்க தயங்கியுள்ளனர்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் மக்களை தொடர்பு கொண்ட குறித்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்ததுடன் அது சம்மந்தமாக சரியான அறிவித்தல்கள் தந்தால் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், ஆர்.டி.எஸ் தலைவர் ஆகியோர் இராணுவத்திற்கு சார்பான செயற்பாட்டாளர்கள் ஆகையில் இச்சம்பவம் தொடர்பில் உறுதியான முடிவினை எடுக்க முடியாது அப்பிரதேச மக்கள் திண்டாடுவதோடு, பல இன்னல்களுக்கு மத்தியிலும் தன்மானத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தை சிங்களவர்களுக்கு விற்க நினைக்கும் இவர்கள் பற்றியும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக