காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகினார்!
காதலர் தினத்துக்கு கணவர் சேலை வாங்கித் தராததால், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகினார்.
திருவொற்றியூர் ராஜாஜி நகர் கம்பர் தெருவில் வசித்து வருபவர் பிரேம்குமார்(வயது 28). பழைய பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி(23). இவர்களுக்கு விக்கி(4), தீபக்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
பிரேம்குமார், உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், சென்னை வியாசர்பாடியில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு கடை வைத்திருந்தார். அப்போது கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த தேவியுடன் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, டெல்லியில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் சிறிது காலம் கழித்து திருவொற்றியூர், ராஜாஜி நகரில் குடியேறினர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி அன்று காதலர் தினத்தில் புத்தாடை அணிந்து பண்டிகை போன்று வெகு விமரிசையாக கொண்டாடி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் மனைவி தேவிக்கு பிரேம்குமார் புடவை எடுத்து கொடுத்தார்.
ஆனால் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிரேம்குமார், தனது மனைவி தேவிக்கு புடவை எடுத்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தேவி, நேற்று முன்தினம் இரவு சமையல் செய்யாமல் இருந்தார். இரவு வீட்டிற்கு வந்த பிரேம்குமார் மனைவியிடம், Òஏன் சமையல் செய்யவில்லை? என்று கேட்டு விட்டு வீட்டிற்குள் சென்று தூங்கி விட்டார்.
இதனால் மேலும் மனமுடைந்த தேவி, திடீரென சமையல் அறைக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் அலறித் துடித்த மனைவியை காப்பாற்ற முயன்ற பிரேம்குமார் மீதும் தீப்பற்றிக்கொண்டது. தீயில் கருகிய இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேவி, பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
0 comments:
கருத்துரையிடுக