மழைகாலங்களில் மாற்றுவீதியில்லை;பொதுமக்கள் சுட்டிக்காட்டு
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மருதங்கேணிச் சந்தியிலிருந்து வெற்றிலைக்கேணி வரையான பிரதான வீதி பொதுமக்களின் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்படாமையினால் அப்பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இவ்வீதியைத் தடைசெய்துள்ளமையினால் மழைகாலங்களில் பொதுமக்களின் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இப்பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான பிரதான போக்குவரத்து வீதியாகவுள்ள இவ்வீதியை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படவில்லை.
யாழ்ப்பாணம் - கேவில், பருத்தித்துறை - கேவில், கிளிநொச்சி - கேவில் ஆகிய பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்குரிய பேருந்துகள் இப்பிரதேசத்திற்கான பிரதான வீதியாகவுள்ள இவ்வீதியையே மழைகாலங்களில் பயன்படுத்தவேண்டியுள்ளது. எனவே இந்நிலையினைக் கருத்திற்கொண்டு இவ் வீதியை திறக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ள பொழுதும் இராணுவத்தினர் இன்னமும் திறந்துவிடவில்லை.
மண்டலாய் பிள்ளையார் ஆலயம், உணவத்தை கண்ணகை அம்மன் ஆலயம், புல்லாவெளி புனித செபஸ்தியர் ஆலயம் போன்ற ஆலயங்களுக்கான பிரதான போக்குவரத்து வீதியாகவும் இவ்வீதியே காணப்படுகிறது.
அத்துடன் பிரதேச மக்களின் பிரதான சுடுகாட்டுக்கு செல்லும் வீதியாகவும் இவ்வீதி காணப்படுகிறது.
இதேவேளை மாரி மழைகாலங்களில் தாளையடி- கட்டைக்காடு கடற்கரை வீதி முற்றுமுழுதாகத் தடைப்படுகின்ற நிலையில் இவ்வீதியே போக்குவரத்திற்கு உகந்தது என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே பிரதேச மக்களின் நலன்கருதி மருதங்கேணி - ஆழியவழை ஊடான வெற்றிலைக்கேணி மருதடி வரையான பிரதான வீதியை மக்கள் பாவனைக்கு திறந்து விடுவதுடன் இவ் வீதியையும் தாளையடி கட்டைக்காடு கடற்கரை வீதியையும் போக்குவரத்திற்கு ஏற்றவகையில் திருத்தி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இப்பிரதேச சமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக