புனரமைக்கப்பட்ட பின்பும் திறக்கப்படாத வைத்தியர் விடுதி
மருதங்கேணி வைத்தியசாலையில் வைத்தியரும் தாதியர்களும் இன்மையால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காகச் சென்ற கர்ப்பவதி ஒருவர் இடைவழியில் வாகனத்தினுள் பிரசவித்த பரிதாபகர சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை அம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தை பிறந்த உடன் கவனிக்கப்படாமையினால் மயக்கமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. வைத்தியரும் தாதியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் மாலை 3 மணிக்கே சம்பவ தினத்தன்று வைத்தியசாலையை ப+ட்டிவிட்டு தமது வீடுகளுக்குச் சென்றுள்ளமையினால் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது-
மருதங்கேணி வைத்தியசாலையிலிருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கட்டைக்காடு கிராமத்தில் வசிக்கும் பெண்ணொருவரை பிரசவ வலியுடன் பிரசவத்திற்காக குறித்த வைத்தியசாலைக்கு கணவன் அழைத்துச் சென்றுள்ளார்.
எவருமே இல்லாத நிலையில் குறித்த வைத்தியசாலை ப+ட்டப்பட்டு இருந்துள்ளது. ஆனால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அம்புலன்ஸ் சாரதியும் அவருடைய உதவியாளரும் பெண்ணின் பரிதாப நிலையை கண்டு பிரசவத்திற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை (மந்திகை) க்கு உனடியாகவே அழைத்துச் சென்றுள்ளனர்.
மருதங்கேணியிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அம்பன் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும்போது குறித்த பெண் அம்புலன்ஸ் வண்டியினுள் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இப்பெண்ணுடன் உதவிக்குச் சென்ற அவருடைய தாயார் பிரசவ வலியால் மகள் வேதனைப்படும்பொழுது மயக்கமடைந்துள்ளார். இதனால் தென்பகுதியைச் சேர்ந்த அம்புலன்ஸ் சாரதியும் அவருடைய உதவியாளரும் பலத்த சிரமத்தின் மத்தியில் மந்திகை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். பிரசவித்தவுடன் குறித்த குழந்தைக்குரிய சிகிச்சை அளிக்கப்படாமையால் மயக்கமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
மருதங்கேணி வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் ஊழியர்களும் நோயாளர்களின் நலனில் அக்கறையுடன் செயலாற்றாது கடமை நேரத்திற்குமுன்னராகவே வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதால் இதுபோன்ற பல இடர்களை குறித்த பிரதேச மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் யாழ்.பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பொழுதும் கடந்த இரண்டு வருடங்களாக இதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென பிரதேச மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதேவேளை இவ் வைத்தியசாலையின் வைத்தியர் விடுதி, தாதியர் விடுதி, ஊழியர் விடுதி என்பன நவீன முறையில் புனரமைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளின் வருகைக்காக திறக்கப்படாமல் இருக்கின்றமையினால் வைத்தியர்கள், ஊழியர்கள் அங்கே தங்கியிருந்து பொது மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்கமுடியாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக