வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் உள்ள வளங்களைச் சுரண்டுவதில் அரச திணைக்களங்களும், நிறுவனங்களும் குறியாக இருக்கின்றார்களே தவிர, பிரதேச அபிவிருத்திக்கென எதனையும் செய்வதில்லை என இந்தப் பிரதேச பொது அமைப்புகள் பலவும் குற்றம் சாட்டியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மிகவும் பெறுமதிமிக்க வளங்களாக காடு, மணல், நன்னீர், மீன்வளம் ஆகியன உள்ளன.
இவை அனைத்தும் எமது மாவட்டத்தைச் சேர்ந்த திணைக்களங்கள், நிறுவனங்களால் சூறையாடப்படுகின்றன. இதேபோல் மீன்வளமும் தென்பகுதி, இந்திய மீனவர்களால் அபகரிக்கப்படுகின்றன.
1950களுக்கு முன்னர் இப் பிரதேச மணல் வளத்தினை வைத்துக் கொண்டு கண்ணாடித் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அக்கால கட்டங்களில் வெளியான புவியியல் பாடப் புத்தகங்களிலும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
எனினும் கண்ணாடித் தொழிற்சாலை ஒன்றை அமைக்க அரசோ, தனியார் நிறுவனங்களோ முன் வரவில்லை. அதற்கு மாறாக கடந்த 60 ஆண்டுகளில் இந்தப் பிரதேச மணல் வளம் முற்று முழுக்க சூறையாடப்பட்டுள்ளது.
எத்தனையோ மணல் பிட்டிகளிலிருந்து அடி நிலத்தோடு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காட்டு வளங்களும் விறகுகளுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. மணற்காட்டில் உருவாக்கப்பட்ட சவுக்கு மரக் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் இங்குள்ள நன்னீரும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறைப் பிரதேசங்களுக்கு குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அதற்கான குழாய் கிணறுகளையும், தண்ணீர்த் தாங்கியையும் அமைக்கவென அப்பிரதேசத்தில் உள்ள நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
இப் பிரதேசத்தின் ஆழ்கடலான வங்காள விரிகுடாவில் மீன்பிடித் தொழிலில் தென் பகுதி மற்றும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு அதிகம். இதில் தென் பகுதி மற்றும் மீனவர்களின் ஆக்கிரமிப்பே மிக அதிகமாகும்.
பிரதேச வளங்களை சுரண்டப்படுகின்றதே தவிர ஏனைய பிரதேசங்களுக்கு ஈடாக இந்தப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. குறிப்பாக இந்தப் பிரதேசத்துக்கான ஒரே ஒரு நெடுஞ்சாலையான பருத்தித்துறை மருதங்கேணி கட்டைக்காடு வீதி சரியான முறையில் திருத்தி அமைக்கப்படவில்லை.
எக்காலமும் குன்றும் குழியுமாக மிகவும் பழுதடைந்த நிலையிலேயே இருக்கின்றது. இதன் காரணமாக நோயாளிகளைக் காவிச் செல்கின்ற அம்புலன்ஸ் வண்டி கூட பெரும் சிரமத்திற்கு மத்தியலேயே பயணத்தை மேற்கொள்கின்றது.
இதேபோல் வேறு எந்தவிதமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று மேலும் கூறப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக