வடமராட்சி கிழக்கு மக்கள் ஆதங்கம்
வடமராட்சி கிழக்குப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித்தொகை குறித்த வீடுகளை அமைக்கப் போதுமானதாக இல்லையெனவும் தமக்குத் தரப்படுகின்ற பணத்தைக் கொண்டு வீடமைப்பதற்குரிய பொருட்களைக் கூடக் கொள்ளவனவு செய்யமுடியவில்லை எனவும் அப்பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் நிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்கமைய ஒவ்வொரு வீடுகளுக்கும் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. இப்பணத்தினைக் கொண்டு பகுதியளவு வீட் டைக் கூட அமைக்கமுடியாத நிலையில் அப்பிரதேச மக்கள் அல்லலுறுகின்றனர்.
இப்பிரதேசத்தில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம், அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் 500 வீடுகளும் சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் 500 வீடுகளும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 90 வீடுகளும் தற்பொழுது அமைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் பணத்தொகை வீடமைப்புக்கு போதுமானதாக இல்லை என்பதால் வீடுகளை அமைப்பதில் பயனாளிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். சில வீடுகளுக்கான அத்திபாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவ் வீடுகளை அமைப்பதற்கு வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை என அம் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும் வீடு கட்டுவதற்குரிய கல், மண், சீமெந்து போன்ற பொருட்களை உரிய இடங்களிற்குக் கொண்டு செல்வதற்கு வீதிகளின்மையால் போக்குவரத்துச் செலவும் அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் வீடுகளை அமைக்க முன்னராக போரால் பாதிப்படைந்துள்ள அப்பிரதேச வீதிகள் புனரமைக்கப்படவில்லை. இதனால் வீட்டுத்திட்டப் பயனாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே இதற்கு மேலதிகமான கொடுப்பனவு வழங்கி உதவுமாறு சம்பந்தப்பட்ட அரச, அரசசார்பற்ற அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போர் அனர்த்தம், ஆழிப்பேரலை என்பவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட இப் பிரதேச மக்கள் வீடுகளை அமைப்பதற்கு உரிய பணக் கொடுப்பனவை வழங்கவேண்டுமென பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக