கூடங்குளம் போரட்டம் என்பது இப்போது இந்திய ஊடகங்களில் அதிகம் அடிபடும் பெயராக உள்ளது. அது மெல்ல மெல்ல பரவி இப்போது இலங்கை உள்ளிட்ட சர்வதேசங்களிலும் பேசப்படும் விடயமாக மாறிவிட்டது. இலங்கையை பொறுத்தவரை மக்கள் அனைவரும் இதை ஒரு இந்திய விவகாரமாகவே கருதி வந்தனர். ஆனால் அது இலங்கையையும் பாதிக்கும் மிகப்பெரிய விடயம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ்நாட்டின் மீன்வளம் மிக்க கரையோர மாவட்டமான திருநல்வேலி மாவட்டத்தின் கூடங்குளம் என்னும் ஊரில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்யாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்துக்கான ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டில் அப்போது பிரதமராயிருந்த ராஜீவ் காந்தியாலும் ரஷ்ய பிரதமராயிருந்த மிக்கையில் கொர்பச்சோவினாலும் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் ரஷ்யாவில் ஏற்பட்ட பிளவுகளாலும், அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்ததாலும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதன் பின்னர் கூடங்குளம் அணுமின் திட்டம் 2001 ஆம் ஆண்டில் மீண்டும் கைச்சாத்திடப்பட்டது. இதன் மதிப்பு இலங்கை பணத்தில் 34,0375 கோடியாகும்.
ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து கடல் வழியாகக் கொண்டுவரப்படும் அணுமின் நிலையத்துக்கான பாகங்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தரை மார்க்கமாக கூடங்குளத்துக்கு கொண்டுவருவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக 2004 ஆம் ஆண்டில் கூடங்குளத்தில் சிறிய அளவிலான துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டது. இந்தியாவின் அதி சக்தித் திறன் வாய்ந்த அணுமின் நிலையமாக கூடங்குளம் திகழும் என்பது இந்திய அரசின் கனவாக இருக்கிறது.
இவ் அணுமின் நிலையத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் எதிர்ப்பலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால் யப்பான் புகுஷிமா, டச்சி போன்ற நகரங்களில் அணுமின் நிலயங்களின் களிவு மற்றும் சுனாமியினால் ஏற்பட்ட அணுஉலைக் கசிவு மற்றும் இதன் விளைவால் யப்பான், ஜேர்மன் போன்ற நாடுகள் தமது அணுமின் உலைகளை மூடியமை போன்ற சம்பவங்கள் இத் திட்டத்துக்கு இருந்த எதிர்ப்பலைகளை சுனாமிப் பேரலையாய் மாற்றியது.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற கரையோரப் பிரதேச மக்கள் பெரும் எதிர்ப்புப் போரட்டங்களை ஆரம்பித்தனர். உடனடியாக இவ் அணுமின் நிலையத்திட்டத்தை கைவிடும்படி மாநில அரசிடமும் மத்திய அரசிடமும் அறைகூவல் விடுத்தனர். இவர்களுக்கு சில அரசியல்வாதிகளும் ஆதரவுக் குரல் எழுப்பினர். இப் போராட்டங்களுக்கு உதயகுமார் என்பவர் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டார். பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் கடலில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டப் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்தினார்கள். மணப்பாட்டில் நடந்த போராட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கெண்டனர். இதனால் பலர் காயமடைந்தனர். அந்தோனியான் என்பவர் பொலிஸாரின் துப்பாக்கி ரவைகளுக்கு பலியாகி உயிரிழந்தார்.
ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் இப்போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அதிலும் அங்குள்ள முதல் அணு உலையில் யுரேனியத்தை நிரப்பிக்கொள்ள அணுசக்தி ஒழுக்காற்று ஆணையம் அனுமதி கொடுத்த பிறகு, அங்குள்ள மக்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இறுதி யுத்தம் என்கிற பெயரில் மக்கள், போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் திணறுகின்றன.
நடப்பவை எல்லாம் எல்லை மீறிச் செல்வதை உணர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மீனவர்களை சமாதானப்படுத்த கச்சதீவு விவகாரத்தைக் கையிலெடுத்தார். மீனவர்களைக் காப்பாற்ற ஒரே வழி கச்சதீவை மீட்பதுதான் எனத் தீர்மானித்தார். எனவே 2008 ஆம் ஆண்டில் அவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விரைவில் விசாரிக்கக் கோரி இன்னொரு மனுவைத் தாக்கல் செயப் போவதா அறிக்கை வெளியிட்டு, மீனவ மக்களை தன்பால் வசப்படுத்த எத்தணித்தார்.
ஒரு வருடமாக இந்த விடயத்தில் மௌனமாகவிருந்த கலைஞர் கருணாநிதி கடந்த மாதம் 13 ஆம் திகதி ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அணுமின் நிலையப் போராட்டம் தற்போது போராட்டக்காரர்கள் கையை விட்டு பொதுமக்களின் கைகளுக்குப் போவிட்டது. நடந்ததை விட்டு விட்டு நடப்பது நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு மத்திய, மாநில அரசுகள் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேச வேண்டும். போராட்டத்தை ஒடுக்க நினைக்கக்கூடாது என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இந்தியாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினை இலங்கையிலும் குடிகொள்ள ஆரம்பித்துள்ளது. ஏனெனில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள ஆகக்குறைந்த தூரம் 74 கிலோமீற்றர் மாத்திரமே. அதுவும் வடக்கின் மன்னார் பிரதேசம் இந்தியாவிலிருந்து ஆகக் குறைந்த தொலைவில் உள்ளது. இதனால் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் இவ் அணுஉலை தொடர்பில் பெரும் அச்சம் நிலவ ஆரம்பித்துள்ளது.
இந்த அணு உலையில் கசிவோ அல்லது வெடிப்போ ஏற்பட்டால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு இலங்கையைத் தாக்கக்கூடிய சந்தர்பப்ம் அதிகமுண்டு. அதுவும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். கதிர்வீச்சின் தாக்கம் பல சந்ததிகளுக்கு நீண்டு செல்லும். இவ்வாறான சம்பவங்கள் பல வெளிநாடுகளில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மன்னார் ஆயர் ராயப்பு யோசப்பின் பிரதிநிதி வண. ஜெயபாலன் குரூஸ், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஐக்கிய சமவுடமைக் கட்சி பொதுச்செயலர் சிறிதுங்க ஜெயசூரிய உள்ளிட்ட குழுவினர் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவைச் சந்தித்து இவ் விடயம் தொடர்பில் பேச்சு நடத்தினர்.
இச் சந்திப்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும், அணுமின் நிலயத்திலிருந்து கழிவுகள் அகற்றப்படுவது தொடர்பிலும் எழுந்துள்ள கேள்விகள் இந்தியத் தூதுவரிடம் எழுப்பப்பட்டது. அத்துடன் இவ்விடயம் தொடர்பில் குறிப்பாக மன்னார் மக்கள் கொண்டுள்ள அச்சம் தொடர்பிலும் இந்தியத் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் எழுத்துமூல ஆவணம் ஒன்றும் குறித்த குழுவினரால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தமிழக முதல்வருக்கும் இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது.
கூடங்குளம் அணுமின் உலையின் ஆபத்து தொடர்பில் உணர்ந்த தென்னிந்திய மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து எமக்கு வெகு தூரமில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பக்கத்து வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்க்காமல் அதனால் எமக்கும் உள்ள பாதிப்பை உணரவேண்டும். தமிழக மக்களின் போராட்டத்துக்கு நாமும் தோள்கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நிகழவுள்ள ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.
எஸ். ரகுதீஸ்
0 comments:
கருத்துரையிடுக