தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உதய் கிரண் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரில் மனைவியுடன் புத்தாண்டை கொண்டாடிய உதய் கிரண், ஹைதராபாத் திரும்பிய பிறகு, தன்னுடைய மனைவி விஷிதாவிடம் பலமுறை தற்கொலை முடிவைப் பற்றி கூறியதாகவும், அதனால்தான் அவர் எங்கு போனாலும் விஷிதாவும் கூடவே சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி விஷதா, சொந்தக்காரர்களுடைய வீட்டில் நடந்த ஒரு பிறந்த நாள் விழாவுக்கு சென்றபோது, உதய்கிரண் தற்கொலை செய்துகொண்டார்.
வி.வி.கே.மூர்த்தி, நிர்மலா தம்பதி யருக்கு 1980 ஜூன் 20-ம் தேதி மகனாகப் பிறந்த உதய் கிரண் செகந்தராபாத் வெஸ்லி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த உதய்கிரண், படிக்கும் காலத்தில் இருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆர்வத்தின் விளைவாக 'மிஸ்டீரியஸ் கேர்ள்' என்னும் ஆங்கில குறும்படத்தில் நடித்தார், அதற்கு அப்புறம் பல விளம்பர படங்களில் நடித்த அவர், 2000-ம் ஆண்டில் தேஜா இயக்கத்தில் 'உஷோதயா' நிறுவனம் தயாரித்த 'சித்திரம்' படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதுவரை 19 திரைப்படங்களில் நடித்துள்ள உதய் கிரண், முதல் மூன்று படங்களில் தொடர் வெற்றிகளைப் பெற்று ‘ஹாட்ரிக்' கதாநாயகன் என்று புகழ் பெற்றார். 2006-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்' படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமான உதய் கிரண், 'வம்புச்சண்டை', 'பெண் சிங்கம்' படங்களிலும் நடித்தார். விரைவில் ஓர் தமிழ்ப் படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது.
சாகும்வரை வெற்றிக்காக ஏங்கினார்
வெற்றி மேல் வெற்றியை தன்னுடைய முகவரி ஆக்கிக் கொண்ட உதய் கிரணுக்கு 2003-ல் தெலுங்கு பட உலகின் “மெகா ஸ்டார்” சிரஞ்சீவி மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. சிரஞ்சீவி அந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தார்.
அதன் பின் உதய் கிரணை தொடர் தோல்விகள் துரத்திக்கொண்டே இருந்தன. ஒரு வெற்றிப் படத்திலாவது நடிக்க வேண்டுமென்ற அவருடைய ஆசை நிறைவு பெறவே இல்லை. ஆகையால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகினாரென்றும், அவரை அதிலிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்த பெற்றோர், அவருடைய பால்ய சிநேகிதியான விஷிதாவுடன் 2012 அக்டோபர் 24-ம் தேதி திருமணம் நடத்தி வைத்ததாகவும் 'டாலிவுட்' வட்டாரத்தில் 'கிசு கிசு'க்கள் பேசிக்கொண்டது உண்டு.
இதைப்பற்றி அவருடடைய தந்தை மூர்த்தியிடம் கேட்டபோது, ''அவன் என் பையன். அவன் கோழை இல்லை. சிறு வயதிலேயே எத்தனையோ இக்கட்டான பிரச்சினைகளைச் சந்தித்தவன். ஹைதராபாதில் கோடிக்கணக்கில் சொத்துகளை வைத்திருக்கிறான். திடீரென்று அவன் சாக வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது?'' என்று கேள்வி எழுப்புகிறார்.
தன்னுடைய மகன் தற்கொலையில் ஏதோ மர்மம் இருப்பதாக அவர் சந்தேகப்படுவதாக தெரிகிறது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி சத்திய நாராயணா கூறியபோது, உதய் கிரணின் மனைவி புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.
உதய் கிரணின் கைப்பேசி, மடிக்கணினி போன்றவற்றை போலீஸார் கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதி சடங்கு நடக்கப் போவதாக சொன்னார்கள் . அவர் கடைசியாக தன்னுடைய கைப் பேசியின் மூலமாக சென்னையிலுள்ள பூபால் என்னும் நபருடன் பேசியதாகவும், தன்னுடைய மனைவி விஷிதாவிற்கு 'I love you' என்ற குறுஞ்செய்தியை அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
வெற்றியின் சின்னம் தற்கொலை அல்ல
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு துடிப்பு மிக்கப் பையன், தன்னுடைய வாழ் நாள் கனவான நடிகனாக மாறியதே மாபெரும் வெற்றி. அதற்கு அப்புறம் தொடர் தோல்விகளின் அணைப்பில் சிக்கிக்கொண்டாலும், அவைகளை 'உயிருடன்' எதிர்கொண்டு தோற்கடிப்பதுதானே வாழ்க்கை! வெற்றி யின் சின்னம் தற்கொலை இல்லையே! இதை எதிர்காலத்தின் ''உதய்கிரண்கள்'' உணர்வார்களா?
0 comments:
கருத்துரையிடுக