சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்ல முற்பட்டவர்கள் பலர் பொலிசாரால் கைது. இதுதான் அண்மைக்காலம் பத்திரிகைகளில் அதிகம் வெளியாகும் செய்தி. இதை ஓர் செய்தியாக மட்டும் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தச் செய்திக்குப் பின் பலரின் கண்ணீரும் கவலையும் புதைந்துள்ளதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
|நான் ஒரு கப்பல் காரரிட். என்ர தொழிலை விற்றும், தெரிந்தவர்களிடம் 5 இலட்சம் கடன் வாங்கியும் மொத்தம் 10 இலட்சம் கொடுத்து அவுஸ்திரேலியா செல்லத் தயாராகி நீர்கொழும்பில உள்ள ஒரு இடத்தில் கப்பலுக்காக காத்துக்கொண்டு இருந்தோம். அப்போது பத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் வந்து அங்கிருந்த நான் உட்பட 30 இற்கும் அதிகமானோரை கைதுசெய்திட்டினம். இரண்டு கிழமை நான் ஜெயில்ல இருந்து பிணையில வெளியில வந்திருக்கிறன். இனிமேல் நான் தொழில் செய்ய கடல்தொழில் உபகரணமும் இல்லை. கடன் கொடுக்க வழியுமில்லை. என்ன செய்யிறதெண்டு தெரியவில்லை| என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கடற்றnhழிலாளி ஒருவர் மன வருத்தத்துடன் தான் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட கதையை பகிர்ந்து கொண்டார்.
இவர் மாத்திரமன்றி நாளுக்கு நாள் பல குடும்பங்கள் இந்த அவுஸ்திரேலியா செல்லும் ஆசையால் நாதியற்று தவிக்கிறார்கள். அவ்வாறு அவர்களின் நிலையை கண்ணெதிரே பார்த்தும் இன்னமும் பலர் அவுஸ்திரேலியா மோகத்ததுடன் தான் இருக்கிறார்கள். ஒருசிலர் பாதுகாப்பற்ற முறையில் பல இன்னல்களை சந்தித்து அவுஸ்திரேலியா சென்றாலும் அவர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஏற்கின்றதா என்று பார்த்தால் அதுவும் கோள்விக்குறிதான். அண்மையில்கூட 10 இற்கும் அதிகமானோரை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளதை பல ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. அவ்வாறில்லாவிடில் அவுஸ்திரேலியாவுக்கு பக்கத்திலுள்ள தீவுகளில் கொண்டு சென்று விடுகின்றது அந்நாட்டு அரசாங்கம். இவற்றையெல்லாம் அறிந்தும் நம்மவர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்து மக்கள் ஏன் இந்த விசப் பரீட்சையை மேற்கொள்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
நாட்டில் சுமார் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவடைந்து அமைதியான சூழல் நிலவுகின்றது. அன்றாடம் நிகழ்ந்த உயிரிழப்புக்கள் குறைவடைந்துள்ளன. இவ்வாறான ஒரு சூழலில் அடுத்து நம்மைச் சுற்றியுள்ள வழங்களைப் பயன்படுத்தி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதே சிறந்ததாகும். அதைவிடுத்து மீண்டும் ஒரு துன்ப நிலையைத் தேடிச்செல்வது துரதிஷ்டமாகும். இவ் அவுஸ்திரேலியா பயணத்தால் கப்பல் கவிழ்ந்து பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளமையை மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.
இதுவரை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 2588 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் அதிகமானோர் தமிழர்கள். அதிலும் வடக்குக் கிழக்கை சேர்ந்தவர்கள். அவுஸ்திரேலியா செல்ல முயன்று அங்கு போய்ச் சேர்ந்தவர்கள் மிகவும் குறைந்த தொகையினரே. ஆனாலும் அங்கு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ப+ர்த்தியாகியதா என்பது கேள்விக்குறியே.
மக்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதில் பல முக்கிய பதவிகளில் இருப்பவர்களும் பங்கு வகிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மக்களின் பாதுகாப்பைப் பற்றி சிந்திப்பதில்லை. இவர்களின் ஒரே இலக்கு பணம் தான். பல இலட்சங்களை வாங்கிக்கொண்டு மக்களின் உயிரைப்பற்றி சிந்திக்காது ஆசைவார்த்தைகளைக் காட்டி அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிலர் பணத்தை வாங்கிவிட்டு அவுஸ்திரேலியா அனுப்புவதாக வரவளைத்து பொலிஸாரிடம் மாட்டி விடுகிறார்கள் என்பது திடுக்கிடும் உண்மை.
அரசைப் பொறுத்தவரை இச் சட்டவிரோத நடவடிக்கையை தடுப்பதில் பெரும் முனைப்புக்காட்டி வருகிறது. வெளியேறும் மக்கள் நம்நாட்டைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். தமது இருப்பைத் தக்கவைப்பதற்காக நம் நாட்டின் பெயரை கெடுப்பதாக அரச தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். படகுகளை மடக்கிப் பிடித்து குற்றப்புலனாய்வினரிடம் ஒப்படைக்கின்றனர். அத்துடன் திருப்பி அனுப்பப்பட்டவர்களிடமும் கடும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்பவர்களை கட்டுப்படுத்த இலங்கை கரையோர பாதுகாப்பு படையினர் ஏனைய நாடுகளின் கரையோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து விசேட கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என இலங்கை கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர் லெப்டினன்ட் கமான்டர் புலே கொட ஆராச்சி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற வகையிலும் சட்டவிரோதமான முறையிலும் ஏனைய நாடுகளுக்குள் பிரவேசிப்பது பாரிய குற்றமாகும். அண்மைக்காலமாக இலங்கையர்கள் பெரும்பாலானோர் சட்டவிரோதமான முறையில் அஸ்திரேலியா சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதை இலங்கையர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறன நடவடிக்கை இடம்பெறுவதை தடுப்பதற்கு ஏனைய நாடுகளுடன் கூட்டிணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா அரசாங்கமும் சட்டவிரோதமாக நமது நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. அதிகமானோரை திருப்பி அனுப்பியுள்ளது. ஏனையோரை கொக்கோஸ், நவுறு தீவுக்கு அனுப்புகின்றது. இந்தத் தீவுகளில் மக்கள் எதிர்பார்த்துச் சென்ற எதுவும் இல்லை. இதனால் தாமாக பலர் விரும்பி திரும்பி வருகின்றார்கள்.
இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவில் வதியும் இலங்கைத் தமிழ் அகதிகளும் இவ்வாறு அவுஸ்திரேலியா செல்வதில் முனைப்புக் காட்டி வருகின்றார்கள். அண்மையில் இந்தியாவிலிருந்து கேரளா வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 55 இலங்கை அகதிகள் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பெண்களும் 15 சிறுவர்ககும் அடங்குகின்றனர்.
பல கஷ்டங்களுக்கு மத்தியில் உயிரை துச்சமென மதித்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வோரில் 90 வீதத்தினர் கைதுசெய்யப்பட்டு வருகின்ற போதிலும் இன்னமும் மக்கள் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நம் நாட்டில் தொழில் இன்றி பலர் கஷ்டப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர் யுவதிகளே. இவர்கள் மத்தியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற விரக்கியான மனநிலையே காணப்படுகிறது.
இதைப் போக்குவதற்கு அரசு அவர்களுக்கு சுயதொழில் உள்ளிட்ட உதவிகளை செய்துகொடுக்க வேண்டும். நாட்டுக்குள் இவர்கள் நிம்மதியாக வாழ வழிசெய்து கொடுக்கவேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநெச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்பட்டால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்.
எஸ். ரகுதீஸ்
0 comments:
கருத்துரையிடுக