அண்மைக்காலமாக
விஸ்வரூபம் எடுத்துள்ள இலங்கை-
இந்திய மீனவர்
பிரச்சினை தொடர்பில் பல்வேறு
தரப்பினராலும் பேசப்பட்டு
வருகின்றது.
இந்தப் பிரச்சினை
குறித்து தமிழ் நாட்டிலும்
தென்னிலங்கையிலும் பல்வேறு
போராட்டங்களும் கருத்துப்
பரிமாற்றங்களும்,
கலந்துரையாடல்களும்
பல தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
எனினும் இந்தச்
சம்பவங்களுடனும் பாதிப்புக்களுடனும்
அதிகமாகத் தொடர்புபட்ட வடபகுதி
மக்கள் குறித்து எவரும்
சிந்தித்ததாகத் தெரியவில்லை.
இந்தப்
பிரச்சினையால் ஏற்பட்டுள்ள
பாதிப்பின் உச்சக்கட்டத்தை
வடபகுதி மீனவர்களே சந்தித்து
வருகின்றனர்.
இந்த மீனவர்
பிரச்சினைக்குத் தீர்வுகாணும்
பொறிமுறைகளில் முக்கிய தரப்பான
வடபகுதி மக்கள் உள்ளடக்கப்படவில்லை.
அவர்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும்
மீனவ சங்கங்களிடம் இதுதொடர்பில்
அறிவித்தலோ ஆலோசனையோ நடத்தப்
படவில்லை என்று வட பகுதி
கடற்றொழிலாளர்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.
கடல்வளம்
மிகுந்த வடபகுதியில் இந்திய
மீனவர்களினதும்,
தென்னிலங்கை
மீனவர்களினதும் அத்துமீறல்
காரணமாக மீனவர்கள் தொழில்
ரீதியில் பெரும் பாதிப்புக்களை
எதிர்நோக்குகின்றனர்.
ஆரம்ப காலங்களில்
அளவாக மீனைப்பிடித்து வளமாக
வாழ்ந்துவந்த வடபகுதி மீனவர்கள்,
இன்று மீன்பிடிக்கச்
சென்று ஏமாற்றத்துடன்
திரும்புகின்றனர்.
தமது கடற்றொழில்
உபகரணங்களையும் இழந்து
வேதனையுடன் திரும்புகின்றனர்.
யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட இந்த மக்கள்
எந்த அடிப்படை வசதிகளும்
ஏற்படுத்திக் கொடுக்கப்படாத
நிலையில் மீளக் குடியேறியுள்ளனர்.
தமது வாழ்க்கையைக்
கொண்டு நடத்துவதற்காக
வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடியில்
சுதந்திரமாக ஈடுபடமுடியாத
நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
வடபகுதியைப்
பொறுத்தவரை அங்கு கடலடித்
தளமேடை அல்லது கண்ட மேடை
எனப்படும் ஆழம் குறைந்த
கடற்பகுதி அதிகமாக உள்ளது.
இது வடக்குக்
கடற்பரப்புக்கான சிறப்பம்சமாகும்.
இந்த கடலடித்
தளமேடை இலங்கையின் ஏனைய
பகுதிகளில் அதிகமாகக்
காணப்படுவதில்லை.
இந்த கடலடித்
தளமேடையில் 'பிளாந்தன்'
எனப்படம்
பாசிவகைக் கடற்தாவரம் அதிகமாக
வளரும். இந்த
'பிளாந்தன்'
தாவரங்களை
மீன்கள் மிகவும் விரும்பி
உண்ணுகின்றன.
இதனால் இந்தப்
பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக
மீன்கள் வருகின்றன.
குறிப்பாக
இறால், கணவாய்,
நண்டு போன்றவை
இங்கு அதிகமாகக் காணப்படும்.
இதனாலேயே வட
பகுதிக் கடல் மிகவும் வளம்
நிறைந்ததாகக் காணப்படுகின்றது.
அத்துடன்
வடபகுதியில் காணப்படும்
பவளப் பாறை எனப்படும் முருகக்
கற்பாறைகளும் மீன்கள்
இனப்பெருக்கம் செய்வதற்கு
வசதியான இடமாகக் காணப்படுகின்றன.
அதனால் இந்தப்
பகுதிகளில் மீன்களும் மீன்
குஞ்சுகளும் அதிகமாகக்
காணப்படுகின்றன.
வடக்கு மக்களைப்
பொறுத்தவரை அவர்கள் இந்த
மீன் வளத்தை தகுந்த முறையில்
பயன்படுத்தி வந்தார்கள்.
அதாவது அளவான
முறையில் மீன்களைப் பிடித்து
வளமாக வாழ்ந்தனர்.
சிறிய அளவிலான
படகுகளையும் வலைகளையும்
பயன்படுத்தி மீன்கள் அழிந்து
போகாத வகையில் மீன்பிடியில்
ஈடுபட்டு வந்தனர்.
சில வரையறைகளை
தாமாகவே ஏற்படுத்தி முறையான
விதத்தில் மீன்பிடியில்
ஈடுபட்டனர்.
உதாரணமாக
மீன்கள் இனப்பெருக்கம்
செய்யும் காலப்பகுதியில்
இந்த மக்கள் மீன்பிடிக்கச்
செல்வதில்லை.
இதனால் கடலடிச்
சமனிலை சீராகப் பேணப்பட்டு
வந்தது. ஆனால்
இப்பொழுது நிலைமை தலைகீழாக
மாறியுள்ளது
வடபகுதிக்
கடலில் மீன்களும் ஏனைய கடல்வாழ்
உயிரினங்களும் நிறைந்துள்ளமையால்
இங்கு தமிழக மீனவர்களும்,
தென்பகுதி
மீனவர்களும் படையெடுக்கின்றனர்.
விடுதலைப்
புலிகளின் ஆதிக்கம் இருந்த
காலத்தில் இவ்வாறான நிலை
ஏற்பட்டிருக்கவில்லை.
ஆனால் யுத்தம்
முடிவடைந்து சமாதானம் நிலவுகின்ற
இந்தக் காலகட்டத்தில் இவர்களின்
அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன.
இவர்கள் எந்த
விதத்திலும் சூழல் பாதுகாப்பைக்
கவனத்தில் கொள்ளாமல் தமது
வருமான நோக்கத்தை மாத்திரம்
கவனத்தில் கொண்டு செயற்படுகிறார்கள்
என வடபகுதி மீனவர்கள்
விசனமடைந்துள்ளனர்.
இலங்கையின்
அரசியல் அமைப்பிற்கமைய சில
மீன்பிடி முறைகள் தடை
செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இந்த
தடைசெய்யப்பட்ட முறைகள்
அனைத்தும் இப்பொழுது
பயன்படுத்தப்படுகின்றன.
தங்கூசி வலை,
இழுவை மடி வலை,
மடி வலை,
போன்றவற்றைப்
பயன்படுத்தி மீன்பிடியில்
ஈடுபடுவது தடைசெய்யப் பட்ட
முறைகளாகும்.
இவ்வாறான
முறைகளை பயன்படுத்துவதை
வடக்கு மக்கள் தவிர்த்து
வந்தனர். ஆனால்
இந்த முறைகள் அனைத்தையும்
பயன்படுத்தி தென்பகுதி
மீனவர்களும்,
தமிழக மீனவர்களும்
வட பகுதி கடல்களில் மீன்பிடியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வடபகுதி
கடலடிச் சமநிலை பாதிக்கப்படுவதுடன்,
கடல் வளங்கள்
அழிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக
மீன்குஞ்சுகள் அள்ளப்பட்டு
செல்கின்றது.
இதனால் எதிர்கால
மீன் வளம் கேள்விக்குறியாகும்
சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
இந்தியாவைப்
பொறுத்தவரை அங்கு மீன்வளம்
குறைந்துகொண்டே செல்கின்றது.
ஆரம்ப காலங்களில்
தமிழ்நாட்டிலும் கடலடித்
தள மேடைகள் அதிகமாகக் காணப்பட்டன,
ஆனால்,
ரோலர் போன்ற
பாரிய இயந்திரங்களைப்
பயன்படுத்தி மீன்பிடியில்
ஈடுபடுவதால் இந்த வளங்கள்
அழிந்துகொண்டே செல்கின்றன.
குறிப்பாக
இழுவை மடி வலை என்ற வலையைப்
பயன்படுத்துவதால்,
இந்த வளங்கள்
பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
கடலடித் தள
மேடையில் இந்த வலையைப்
பயன்படுத்தும்போது,
கடலிலுள்ள
மணல் மட்டுமன்றி அதிலுள்ள
'பிளாந்தன்'
போன்ற கடல்
தாவரங்களுடன் மீன் குஞ்சுகளும்
வாரி எடுக்கப்படுகின்றன.
இதனால் கடலடித்தள
மேடைகள் அழிக்கப்பட்டுள்ளன.
அதேபோல்,
இழுவை மடி
வலையைப் பயன்படுத்தும்போது
கடல் மண்ணுடன் வாரி எடுக்கப்படும்
பிளாந்தன் தாவரங்களை மீண்டும்
கடலுக்குள் வீசுகின்றனர்.
ஆனால்,
இந்தத் தாவரங்களைப்
பொறுத்தவரை கடல் நீரிலிருந்து
வெளியில் எடுத்த சில கணங்களிலேயே
அவை இறந்து விடுகின்றன.
இதனாலேயே
தமிழகக் கடற்பகுதிகளில் மீன்
வளங்கள் அற்றுப் போயுள்ளன.
இதனால்தான்
தமிழக மீனவர்கள் மீன்வளம்
மிகுந்த வடக்கை நோக்கி
வருகின்றனர்.
அவ்வாறு
வருபவர்கள் தமிழகத்தில்
பயன்படுத்திய அதே முறையைத்தான்
இங்கும் பயன்படுத்த முனைகின்றனர்.
இதனால்
பாதிக்கப்படுவது வடபகுதி
மீனவர்கள்தான்.
வடக்கின்
மன்னார் முதல் சுண்டிக்குளம்
வரையிலான அனைத்துப் பகுதிகளிலும்
24 மணித்தியாலயங்களும்
தமிழக மீனவர்கள் மீன்பிடியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு மீனவர்கள்
எப்பொழுதுமே பகல் வேளைகளில்
மீன்பிடியில் ஈடுபடுவதில்லை.
ஏனெனில் மீன்கள்
பகல் வேளையிலேயே இனப்பெருக்கம்
செய்கின்றன.
இதனைக் கருத்தில்
கொண்டு அவர்கள் பகலில்
மீன்பிடியில் ஈடுபடுவதில்லை.
ஆனால் தமிழக
மீனவர்கள் 24
மணித்தியாலயங்களும்
இலங்கைத் தமிழர் பகுதிகளில்
மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
இதனால்
வடபகுதியில் தமிழகத்தைப்
போன்று மீன்வளம் குறையும்
நிலை ஏற்படுகின்றது.
அதுமட்டுமன்றி
பாரிய ரோலர் படகுகளில்
மீன்பிடிக்க வரும் தமிழக
மீனவர்கள் வடபகுதி மீனவர்கள்
பயன்படுத்தும் சிறிய அளவிலான
வலைகளையும்,
ஏனைய மீன்பிடி
உபகரணங்களையும் சேதப்படுத்துகிறார்கள்.
வலைகளை வெட்டிச்
செல்வது தொடர்ச்சியாக
இடம்பெறுகின்றது.
யுத்தத்தால்
பல்வேறு இழப்புக்களையும்
இன்னல்களையும் சந்தித்து
மீண்டுள்ள வடபகுதி தமிழ்
மக்கள் தமது வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்காக மீன்பிடித்
தொழிலில் ஈடுபடும்போது,
அதற்குத்
தடையாக தமிழக மீனவர்கள்
செயற்படுகின்றனர்.
இலங்கைத்
தமிழர்களுக்காக போராட்டங்களையும்,
ஆர்ப்பாட்டங்களையும்
நடத்திவரும் அதே தமிழக
மக்கள்தான் அன்றாட உணவுக்காய்
மீன்பிடியில் ஈடுபடும் தமிழ்
மக்களின் வாழ்வாதாரத் தொழிலை
சீர்குலைக்கின்றனர்.
இது ஏன் தமிழக
அரசியல் வாதிகளின் பார்வையில்
படவில்லை என்ற கேள்வியை வடக்கு
மக்கள் எழுப்புகின்றார்கள்.
2004
ஆம் ஆண்டில்
நடைமுறைப்படுத்தப்பட்ட கடல்
வலயத் தடைச்சட்டம் முதல்
வடபகுதி மீனவர்கள் பல்வேறு
இன்னல்களைச் சந்தித்து
வருகின்றனர்.
தொடர்ச்சியான
இடப்பெயர்வுகளாலும்,
சுனாமியினாலும்
இழப்பின் உச்சக்கட்டத்தை
எட்டிநிற்கின்றனர்.
இதனைப் புரிந்து
கொள்ளாத தமிழக மக்களும் தமிழக
அரசும், தமிழக
அரசியல்வாதிகளும் மீனவர்களை
விடுவிப்பதில் பேரம்பேசி
வருகின்றனர்.
இலங்கை
சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களையும்,
தமிழகச்
சிறையிலுள்ள இலங்கை மீனவர்களையும்
விடுவிப்பது தொடர்பில் பேச்சு
வார்த்தைகள் நடத்தப்பட்டு
விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழகச்
சிறைகளில் எந்தவொரு வடபகுதி
மீனவர்களும் தடுத்து
வைக்கப்பட்டிருக்கவில்லை
என்ற உண்மையை இந்த இரண்டு
தரப்பும் உணரவேண்டும்.
ஏனெனில் வடபகுதி
மீனவர்கள் எல்லையை மீறி
மீன்பிடித்தல்,
கடல் வளத்தை
அழிக்கும் வகையில் மீன்பிடித்தல்
போன்றவற்றில் ஈடுபடுவதில்லை.
ஆனால் இந்த
இரண்டு தரப்பினராலும் அதிகம்
பாதிக்கப்படுவது வடபகுதி
மீனவர்கள்தான்.
தமிழக
மீனவர்களினதும்,
தென்பகுதி
மீனவர்களினதும் அத்துமீறல்களுக்கு
ஆளாகி தமது தொழிலுபகரணங்களை
இழந்து நிற்கின்றார்கள்.
ஆனால் இது
தொடர்பில் யாரும் பேசுவதற்கு
முன்வருவதில்லை.
எதிர்வரும்
27 ஆம்
திகதி இருநாட்டு மீனவப்
பிரதிநிதிகளுக்கிடையில்
நடைபெற்றவுள்ள பேச்சுவார்த்தையின்
போது வடபகுதி மீனவ பிரதிநிதிகள்
உள்ளடக்கப்படுவதற்கான
ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.
வட மாகாணத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும்
கடற்றொழிலாளர்கள்
கூட்டுறவுச்சங்கங்களின்
சமாஜம் மற்றும் வடமாகாண
கடற்றொழிலாளர் மீனவ அமைப்பு
போன்றவை ஓரங்கட்டப்பட்டுள்ளன.
அந்த அமைப்புகளிடம்
இந்த விடயம் தொடர்பில்
பேச்சுவார்த்தையோ அல்லது
ஆலோசனையோ நடத்தப்படவில்லை.
இந்த மீனவர்
பிரதிநிதிகள் சந்திப்பின்
போது தென்னிலங்கையைச் சேர்ந்த
கரையோர மீனவர் அமைப்பு என்ற
அமைப்பு மாத்திரம் பங்குபற்க
ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக
தெரிய வருகிறது.
இந்த அமைப்பு
சுதந்திரக் கட்சியினால்
தமது அரசியல் நோக்கங்களுக்காக
உருவாக்கப்பட்ட அமைப்பு.
இதனாலேயே
இந்தப் பேச்சு வார்த்தையில்
இந்த அமைப்பை மீன்பிடித்துறை
அமைச்சர் ராஜித சேனாரத்ன
ஈடுபடுத்தியிருந்தார்.
இந்த பேச்சு
வார்த்தையின் மூலம் இந்தியச்
சிறைகளிலுள்ள 247
தென்பகுதி
மீனவர்களை மீட்பதன் மூலம்
கரையோர மக்களின் வாக்குகளைப்
பெறுவதே அரசின் திட்டமாக
இருந்தது.
ஆனால்,
இந்த உண்மையைப்
புரிந்து கொள்ளாத தமிழக மீனவ
அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட,
பாதிக்கப்படுகின்ற
வடமாகாண மக்கள் தொடர்பில்
சிந்திக்காது தொடர்ந்தும்
பேச்சுவார்த்தை முயற்சிகளில்
ஈடுபடுகின்றன.
அதேநேரம்,
தமிழ்நாட்டில்
சரிந்துபோயுள்ள தமது செல்வாக்கை
நிலைநிறுத்துவதற்காக காங்கிரஸ்
அரசு இலங்கை அரசுடன் இணைந்து
இவ்வாறானதொரு பேச்சுவார்த்தை
நாடகத்தை நடத்துகின்றதா என்ற
எண்ணமும் தமிழ் மக்கள் மனங்களில்
எழுந்துள்ளது.
ஆனால் இலங்கைத்
தமிழர்கள் என்று கோஷமிடும்
தமிழக அரசியல்வாதிகள் சிலருக்கு
இந்த விடயம் புரியாதிருப்பது
ஏன் என்பது தெரியவில்லை.
இப்பிரச்சினை
தற்பொழுது முற்றியுள்ள
நிலையில் இதனை தென்னிலங்கை
ஆட்சியாளர்களும் இந்திய
அரசியல்வாதிகளும் அரசியலாக்கியுள்ளதால்
வடபுல மீனவர்களின் எதிர்காலமே
கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
ஒருநாட்டின்
வளங்கள் அனைத்தும் அந்த
நாட்டுமக்களுக்குச்
சொந்தமானவையாகவும் சர்வதேச
சட்டங்களால் நாடுகளின் கடல்
எல்லைகள் வரையறுக்கப்பட்டும்
காணப்படுகின்ற பொழுதிலும்,
வடக்கில்
அத்துமீறி இந்தியர்கள் மீன்
பிடிப்பதற்கு இலங்கை .அரசு
மறைமுகமாக அனுமதி வழங்கியுள்ளதா
என்ற சந்தேகம் வடபகுதி
மக்களிடையே காணப்படுகின்றது.
இதேபோல்
தற்பொழுது வடகடலில் அரசின்
அனுமதியுடன் சீனர்களும்
மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
எனவே
வடபுல மீனவர்களின் எதிர்காலம்
கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள
நிலையில்,
வடக்கு மீனவர்களும்
தமது கடலில் மீன்பிடித்து
வாழக்கூடிய வழிமுறைகளை
ஏற்படுத்த வேண்டியது அரசின்
கடப்பாடாகும்
எஸ்.ரகுதீஸ்